விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகே 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதனால் ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் கோபுரம் அமைப்பதில் உரிய விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அதனால் இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.