முதல்வர் உட்பட அதிமுக அரசின் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக தலைவர் மனு அளித்துள்ளார்.
இன்று காலை ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “கடந்த 2011ல் இருந்து 2016 வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கும் ஊழல் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் நான்கு வருடத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்களை நாங்கள் கொடுத்திருந்தோம். ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை நாங்கள் கொடுத்த எந்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், மத்திய அரசு வழங்கியிருக்கும் அரிசியை வெளிச் சந்தையில் விற்ற ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் குவித்துள்ள ஊழல் போன்ற அனைத்தையும் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஏற்கனவே கொடுத்துள்ளோம். துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் குவித்த ஊழல். இதில் என்னவென்றால் உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டுள்ளது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோன்று எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார். உதயகுமார் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் உள்ள ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால் அந்த புகார் தெடர்பான ஆதாரங்களை எல்லாம் ஒன்று திரட்டி இன்று நாங்கள் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் பழனிசாமி வருமானத்திற்கு மீறி சொத்துக்களை குவித்துள்ளார். அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளோம். 2018ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவிட முடியும்.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆளுநர் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும். விசாரணை நடத்துவதை ஆளுநர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆவணங்களை எல்லாம் இன்று நாங்கள் சமர்பித்துள்ளோம். இன்னும் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தொடர்ந்து எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவற்றை நாங்கள் கழக வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்த பிறகு நிச்சயமாக மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிப்போம். நாங்கள் கொடுத்த புகாரை படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது” என கூறியுள்ளார்.