கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் வட்டி என்பது கடன்களுக்கு ஒரு வங்கி விதிக்கக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை வட்டி. இந்த வட்டி விகிதத்திற்கு கீழே கடன் கொடுக்க முடியாது. எனவே எம்சிஎல்ஆர் வட்டி உயர்த்தப்படும் போது கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
ஏற்கனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்கள், புதிதாக கடன் வாங்குபவர்கள் என்று இரு தரப்பினருக்கும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும். நாளை முதல் இந்த வட்டி விகிதம் 7.75 சதவீதமாக உயர உள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் போன்ற கடன்களை வாங்கியோர் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டும். கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தியதைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .