இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது.
கடந்த 19ம் தேதி நடந்த படப்பிடிப்பின்போது திடீரென கிரேன் கீழே அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது உயிரிழந்தனர். படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சங்கர், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது.
மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனைதான் என்னை வாட்டி எடுக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும்போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது என உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.