பிரபலமான தாஜ் ஹோட்டலின் வரலாறு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கொலாபா பகுதியில் பிரபலமான தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் அமைந்துள்ளது. இது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இந்த தாஜ் ஹோட்டலில் மொத்தம் 565 அறைகள் உள்ளது. இந்த ஹோட்டல் இந்திய சராசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஹோட்டல் உருவான வரலாறு குறித்து சில தகவல்களை பார்க்கலாம். இந்த ஹோட்டலை ஜாம்சேதிஜி டாடா கட்டினார்.
இவர் ஒரு முறை பிரபலமான வாட்சன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த வெள்ளையர்கள் டாடாவை ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் வெள்ளைக்காரர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் இந்தியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறி டாடாவை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த டாடா இதேப்போன்று பிரமாண்டமான ஹோட்டலை இந்தியாவில் கட்டுகிறேன் என சவால் விட்டு விட்டு வந்துள்ளார்.
இவர் சவால் விட்டது போலவே 1903-ம் ஆண்டு பிரம்மாண்டமான தாஜ் ஹோட்டல் மும்பையில் திறக்கப்பட்டது. இந்த ஹோட்டலில் அரசர்கள், இளவரசர்கள், பல்வேறு நாட்டு மன்னர்கள், தொழிலதிபர்கள், நாட்டின் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்கியுள்ளனர். இந்த ஹோட்டலில் அமைந்துள்ள டவர் பிளாக் பகுதி 1970-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுனர் ஆன மெல்டன் பெக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
இந்த ஹோட்டல் சீதாராம் கண்டே ராவ் மற்றும் டி.என் மிஸ்ரா என்ற கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்டது. இவர்களால் தாஜ் ஹோட்டல் வடிவமைக்க பட்டாலும் இறுதியில் அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனரான டபிள்யூ.ஏ சேம்பரால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் முதன்முதலில் திறக்கப்பட்டபோது ஹோட்டலின் பணியாளர்களாக ஆங்கிலேயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஹோட்டல் 3 முறை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.