இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். உலக அளவில் கொரோனா தடுப்பு ஊசியில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி ஆறு நாட்களில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் பல தடுப்பூசிகளும் விரைவில் தயாரிக்கப்பட்ட உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகள் உலகின் மிக அதிக அளவிலும், அதிக வேகத்திலும் உதவும் என்றும், அதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.