பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள் என புகழ்ந்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்துள்ளார். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 60 நாட்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
அதில் இன்று மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இம்ரான்கான் இந்தியாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். இம்ரான் கான் பேசுகையில் இந்தியர்கள் மிகவும் சுயமரியாதையை கொண்டவர்கள் எந்த ஒரு வல்லரசு நாடு இந்தியாவிற்கு கட்டளையிட முடியாது.ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மற்றும் காஷ்மீருக்கு என்ன நடத்தப்பட்டது ஆகியவற்றால் நான் ஏமாற்றமடைந்தேன். இதனால், இந்தியாவுடன் நாம் நட்புறவு மேற்கொள்ளவில்லை’ என கூறியுள்ளார்.