அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழா நடந்ததையடுத்து நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவை நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். தற்போது ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு ராமர் கோயில் ஒரு எடுத்துக்காட்டாக அமைய இருக்கிறது.
ராமர் கோயில் கட்டும் பணி மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவில் ஒன்றுபட்டு வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ராமர் கோயில் கட்டுவதற்காக கன்னியாகுமரியிலிருந்து பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்ட நிலையில், அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்படாதது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.