இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயம் ஒன்றை வெளியிட போவதாக இங்கிலாந்து அரசு தகவல் அளித்துள்ளது.
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி இங்கிலாந்து அமைச்சர் ரிஷிசுனிக் பேசும்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு படுத்துகின்ற வகையில் நாணயம் ஒன்றினை வெளியிடுவதற்கு ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி காந்தி கருப்பு மற்றும் ஆசிய, பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதாக அரும்பாடுபட்டுள்ளார் என்பதனை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ராயல் மின்ட் அட்வைசரி கமிட்டி வெளியிட்டு இருக்கின்ற மின்னஞ்சலில், காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயத்தை வெளியிடுவதற்கான முடிவை தற்போது பரிசீலித்து வருகின்றது என அறிவித்துள்ளது. 1869 ஆம் ஆண்டு பிறந்த காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சை வழிகளை கடைபிடித்து அது மட்டுமல்லாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இத்தகைய காரணத்தால் அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிக்க போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உலகில் இருக்கின்ற பல்வேறு நாடுகள் காந்தியின் போதனைகளை நாள்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல்மாடலாக கொண்டு பல நாட்டில் இருக்கின்ற தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மகாத்மா காந்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்கள் அனைவரின் ஒற்றுமை மூலமாகவும் அமைதியான போராட்டங்கள் மூலமாகவும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இயலும் என்ற எண்ணத்தை கற்றுக்கொடுத்தவர் காந்தி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.