இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு 1.1 லட்சம் கோடி வரை செலவாகும். இத்திட்டத்திற்காக ஜப்பான் அரசின் சர்வதேச ஒருங்கிணைப்பு நிறுவனம் 88,000 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த ரயில் மொத்தம் 12 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதன்படி குஜராத்தில் 8-ம், மகாராஷ்டிராவில் 5-ம் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டுப்பாட்டு மையம் சபர்மதியில் அமைக்கப்படுகிறது.
இதற்காக சூரத், சபர்மதியில் 2 பணிமனைகளும், தானேயில் 1 பணிமனையும் அமைகிறது. இந்த ரயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே 2022-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிலப்பிரச்சனையால் தாமதமாகிறது. இந்நிலையில் சூரத்தில் நடைபெற்று வரும் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் பிலிமோரா மற்றும் சூரத் இடையே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புல்லட் ரயில் திட்டமானது வருகிற 2026-ம் ஆண்டு தொடங்கப்படும் என கூறினார். அதன்பிறகு குஜராத்தில் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தாலும் கூட நிலப்பிரச்சினையால் தாமதமாகி வருகிறது என்றும், புல்லட் ரயில் திட்டம் ஒரு தேசிய திட்டம் என்பதால் மகாராஷ்டிரா அரசு அதில் அரசியல் செய்யக்கூடாது எனவும் கூறினார்.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் நிலப்பிரச்சனை முடியும் வரையில், குஜராத்தில் பணிகள் வேகமாக முடிக்கப்படும் என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக 90% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தேசிய அதிவிரைவு இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக குஜராத்தில் 98.79% மற்றும் மகாராஷ்டிராவில் 71.49% கையகப்படுத்தப்பட்டுள்ளது.