தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவின் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பை பெரும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கௌரவம் மிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்தியாவில் அதிக மகளிர் போலீஸ் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தமிழகம் நல்ல வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறது. தமிழகத்தில் 46 கிரைம் காவல் நிலையங்களுடன் தனி சைபர் கிரைம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பான திட்டம் ஆகும். அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. இங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராடுக்குரியது. கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து என் மனதில் சென்னைக்கு என்றும் தனி இடம் உண்டு. இந்தியாவில் சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும். ஒவ்வொரு தமிழருக்கும் இது மகிழ்ச்சியான நாளாகும். மேலும் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து போலீசாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.