தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பங்கேற்று புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த புகார்தாரர்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 1300 முதல் 1500 மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு வருவதாக தெரிவித்தார். இதில் 90 சதவீத புகார்களுக்கு எளிதில் தீர்வு எட்டப்பட்டு வருவதாகவும், 10 சதவீதம் மக்கள் மட்டுமே மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.