இந்தியாவில் முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு நபர் கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு மறுநாளே பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அராரியா போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் வாதம் மற்றும் தண்டனை என அனைத்தும் ஒரே நாளில் நடந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, 50 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டிலேயே மிக வேகமாக ஒரே நாளில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இது மாறியுள்ளது. ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் 26-ம் தேதி தான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் மூன்று நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.