நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது “பொருளாதார மீட்சியின் சிகரத்தில் இந்தியா உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். உலகளவில் பொருட்கள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதையும் மீறி உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்குமென புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.
சென்ற 7 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வாயிலாக இனிவரக்கூடிய ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டில் பணவீக்க விகிதமானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கினை தாண்டி உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆகவே பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதனால் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 7.8 % வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று ஆகும். பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து பொருட்களின் விலையையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கடந்த காலக் கட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இந்த முறை மாநிலஅரசுகள், வரியை குறைப்பதற்கு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.