கொரோனா பரவலின் மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. நாடு முழுவதும் கொரோணா மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது. கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆர் மதிப்பு 1.57 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆர் மதிப்பு மும்பையில் 0.67 ஆகவும், டெல்லியில் 0.98 ஆகவும், சென்னையில் 1.2 ஆகவும், கொல்கத்தாவில் 0.56 ஆகவும் உள்ளது. ஆர் மதிப்பு ஒன்றை விட குறைந்தால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிடும். இதுதொடர்பாக சென்னை ஐஐடி கணிதத் துறை இணைப் பேராசிரியர் ஜெயந்த் கூறுகையில், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு ஏற்கனவே உச்சமடைந்து விட்டதை ஆர் மதிப்பு உணர்த்துகிறது. டெல்லி, சென்னை நகரங்களில் இன்னும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதைய ஆய்வின்படி கொரோனா மூன்றாவது அலை பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் உச்சமடையும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.