நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் எதிர்பார்த்ததைவிட 3 வாரங்களுக்கு முன்னரே உச்சத்தை தொடலாம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தொற்று அதிகம் பாதித்த முதல் 15 மாவட்டங்களில் டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் தொற்று குறைந்துள்ளது. இருந்தாலும் முதல் 15 மாவட்டங்களில் உள்ள பெங்களூரு, புனே உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் தற்போது அதிக தொற்று விகிதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிராமப்புறங்களிலும் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் கொரோனா 3-வது அலையில் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி போடுவதில் பின் தங்கியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதனால் இனி எதிர்வரும் காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்தினால் 2 அல்லது 3 வாரங்களுக்குள் தேசிய அளவில் தொற்று பரவல் உச்சம் பெறலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.