இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்குள் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் நாடியா நகரில் சிலர் சந்தேகத்திற்குரிய வகையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினரை கண்டவுடன் அவர்கள் அனைவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அதன் பின்னர் அவர்களை துரத்திய காவல்துறையினர் பெண் ஒருவரை கைது செய்த நிலையில், மற்ற இருவரும் தப்பி சென்று விட்டனர்.
கைது செய்த பெண்ணிடம் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில், வங்காளதேச நாட்டை சார்ந்த 40 வயதுடைய கலீதா ஷேக் என்பதும் கடத்தல்காரர்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவ முயற்சி செய்த வங்காளதேச பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பிறகு அவரிடம் இருந்து ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.