இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் திகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 1,52,545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது. அதனைப் போலவே நேற்று மட்டும் 90584 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 839 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,69,275 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்து எண்ணிக்கை 1,20,81,443 ஆகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,08,087 உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வருவதால் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.