இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ கணிசமாக உயர்ந்திருப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவுகிறது என்பதைக் கணக்கிடும் ஆர் வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஆர் வேல்யூ 1-க்கு குறைவாக இருந்தால் தொற்று பரவல் வேகம் குறைவாக இருக்கிறது. 1-க்கு அதிகமாக இருந்தால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கின்றது என மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் ஒட்டு மொத்த ஆர் வேல்யூ 1.3 ஆக இருக்கிறது என்றும் தலைநகர் டெல்லியில் ஆர் வேல்யூ 2.1 ஆக அதிகரித்துள்ளது எனவும் ஐஐடி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா 4-வது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது என்று கூறிய ஆய்வில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர், இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 பேருக்கு தொற்றை கடத்துகிறார் என்று தெரிவித்திருக்கிறார். டெல்லியைத் தவிர மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் தொற்று குறைவாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.