உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 271ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 23 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது நிலவரப்படி கர்நாடகாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 18ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி அறிவித்துள்ளார். அதில் நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமானவை என நேற்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.