ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கைது செய்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவன் பாகிஸ்தானை சேர்ந்த தபாரக் உசேன் என்பது தெரியவந்தது. இவர் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இந்தியாவில் நாச வேலை செய்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த கர்னல் யூனுஸ் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதேபோன்று மேலும் 5 பேர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார். இதற்கிடையில் ஊடுருவ முயன்றபோது பாதுகாப்பு படையினர் சுட்டதில் காயடைந்த தபாரக் உசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.