தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அசாமில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 6.62 லட்சம் பொதுமக்கள் பாதிப்படைந்து இருக்கின்றனர். தர்ராங் மாவட்டத்தில் மட்டுமே இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2.88 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கச்சாரில் 1.2 லட்சம் பொதுமக்களும்,ஹோஜாயில் 1.7 லட்சம் பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் வலுவான தென்மேற்கு காற்று மற்றும் கிழக்கு மேற்கு பள்ளம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்த வாரம் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜோத்பூர் மற்றும் பிகானேர் போன்ற பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெங்களூரிலும் அதிகமான மழைப் பொழிவின் காரணமாக அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. மகாராஷ்டிராவின் பல்வேறுபகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் கொங்கன் மற்றும் மராத்வாடா போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் விதர்பா மாவட்டங்களில் மே 17ஆம் தேதி முதல் 21 வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.