தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் வழங்கப்படுவதாகவும், பணம் கிடைக்காத பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் குஜாலாபாத் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குஜாலாபாத் எம்எல்ஏவாக இருந்த எல் ஆர். ராஜேந்திரன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதை கட்சி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வர் சந்திர சேகர் ராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையிலிருந்து பதவி விலகிய இவர் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராஜினாமா செய்த எல் ஆர். ராஜேந்திரன் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சார்பில் சீனிவாச யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி வெங்கட பால் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மும்முனை போட்டி இருந்தாலும் பாஜக மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதை கட்சி இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரக் நிறைவடைந்த நிலையில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் மது வினியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆளும் கட்சியும், பாஜகவும் இந்த தொகுதியில் போட்டி போட்டு ஒரு ஓட்டுக்கு 6,000 முதல் 10,000 ரூபாய் வரை வழங்குகின்றனர். பல பகுதிகளில் பணம் கிடைக்காத பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய தகவல் அறிந்ததும் ரங்கப்போல், கற்றாபள்ளி மற்றும் கெடா பாப்பியா கிராமங்களில் பணம் விநியோகம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் பணம் விநியோகம் செய்வதை தடுக்காமல் ஒன்றிய அரசும், ஆளும் கட்சியினரும் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தலில் பணம் மழை பொழிவதால் உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.