பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத்தில் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர்,” விவசாய திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டுவந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சிலருக்கு இது பிடிக்கவில்லை என்பதால் அரசு அதனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.