இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. குளிர்காலத்தில் குடியிருப்பு வீடுகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வைரஸ் பரவுவது அதிகரிக்கும். அதனால் இந்திய சூழலைப் பொறுத்தவரையில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று யூகிப்பது தவறானது இல்லை.
இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். வரும்முன் காப்பதே சிறந்தது. அதுமட்டுமன்றி பண்டிகை காலங்கள் வர இருப்பதால், கொரோனா காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றுகூடி பண்டிகைகளை கொண்டாடினால் கட்டாயம் கொரோனா பாதிப்பு வரும். தங்களின் நலனை கருத்தில்கொண்டு அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தபடியே அனைத்து பண்டிகைகளை கொண்டாடி மகிழுங்கள்”என்று அவர் கூறியுள்ளார்.