கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் அடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மூன்று அலைகளை இந்தியா சந்தித்தது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பரவலின் மூன்றாவது அலை அதிகமாக இருந்தபோதும் உயிரிழப்பு குறைவாக இருந்தது. ஆனால் இரண்டாம் அலையில் சிக்கிய நோயாளிகள் பலரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது தொற்று பரவ ஆரம்பித்த சீனா மற்றும் ஆசிய ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் சீனாவில் 10 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தொற்று பரிசோதனை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.