இந்தியாவுடன் அமைதியான உறவே விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாடுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்றுப் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகின்றோம். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும். தெற்கு ஆசியா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது. போரில் இரண்டு நாடுகளுக்குமே விருப்பம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் நிரந்தரமான அமைதியையே விரும்புகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.