அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தங்களது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொதுச்செயலாளர் மௌலான வாலி ரஹ்மானி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “எவரும் மனது உடைந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நமது நாட்டின் நீதி பரிவாரத்தின் மிக உயர்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நாம் பிறந்த தாய் நாடான இந்தியாவை நேசிக்கிறோம்.
தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை விட மிக அதிகமாகவே இந்தியாவை நேசிக்கிறோம். ஆனாலும் இத்தகைய தீர்ப்பு நியாயம் இல்லாதது என்றே நாங்கள் கூறுவோம். இங்கு இஸ்லாமியர்கள் மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதியாக பொது தளமாக செயல்பட்டு பாபரி மசூதி நீதிக்காக போராடி நாம் எடுத்த முயற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை” என கூறினார்.
இது குறித்து கருத்து கூறிய அகில இந்திய Majlis-e-ittehadul முஸ்லிமீன் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “இன்று பிரதமர் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்ததாக பலர் கூறினர். நான் சகவாழ்வு மற்றும் குடியுரிமை சமத்துவத்தை முழுமையாக நம்புகிறேன். இதனால் நானும் தற்போது சமமாகவே உணர்ச்சிவசபடுகிறேன் என்று கூற விரும்புகிறேன். பிரதமர் மோடியை போன்றதுதான் உணர்ச்சிவசப்படுகிறேன். 450 ஆண்டுகளாக அவ்விடத்தில் அமைந்திருந்த மசூதி இப்போது அங்கில்லை. அதனை நினைத்து உணர்ச்சிவசபடுகிறேன்” என்று கூறினார்.