இந்தியா அமைதியை விரும்பும் நாடு என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில்,” உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை எதிர்கொள்ள சூப்பர் மனித முயற்சிகள் கட்டாயம் தேவை. இந்த சவாலை முன்கூட்டியே எதிர்பார்த்ததுடன், உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்ததுள்ளது.கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களை நான் மனமார பாராட்டுகிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது. அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நமது தேசிய கதாநாயகர்கள்.
மாநில அரசுகளும் உள்ளூர் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுத்துள்ளன. அதனால் கொரோனா பாதிப்பு பெருமளவு தடுக்கப்பட்டு, உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பின்பற்ற வேண்டும்.கொரோனாவில் இருந்து உலகம் கடுமையான பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்பதை இந்த கொரோனா தகர்த்துள்ளது. இதனை உணர்ந்து, நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்.இயற்கைக்கு முன்பு நாம் அனைவரும் சமமானவர்கள் என்ற இரண்டாவது பாடத்தையும், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற மூன்றாவது பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.
கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ திட்டம், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகவும் உதவியுள்ளது.நமது பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கொரோனா பரவல் நேரத்தில் சுதந்திர தினத்தை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில், நமது அண்டை நாட்டில் உள்ள சிலர், எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையை பாதுகாக்கும் முயற்சியில் உயிரிழந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்.
நாட்டின் பெருமைக்காக அந்த பாரத மாதாவின் புதல்வர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது. இந்தியா, அமைதியில் நம்பிக்கை கொண்ட நாடு. இருப்பினும், எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், தக்க பதிலடி கொடுக்கும் திறன் கொண்ட நாடு என்பதை அவர்களின் துணிச்சல் உணர்த்துகிறது. அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது எல்லோருக்கும் பெருமைக்குரியது. மக்கள் நீண்ட காலம் பொறுமையாக இருந்து நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் நற்பண்புகளை உலகிற்கு காட்டியுள்ளனர்.