Categories
உலக செய்திகள்

இந்தியா- அமெரிக்கா உறவில் பெரிய முன்னேற்றம்… அதிபர் டிரம்ப் குறித்து வெள்ளை மாளிகை தகவல்…!!!

இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்ள ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்க உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்துவது என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ” இதற்கு முந்தைய நிர்வாகங்களில் இல்லாத அளவிற்கு டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான உறவில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இருநாடுகளும் பரஸ்பர நலன் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கடந்த பிப்ரவரி 24 முதல் 26-ஆம் தேதிகளில் அதிபர் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வந்த வெளிநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியும் ஒருவராவார். ஹூஸ்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஹவுடி மோடி விழாவில் 55,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்வில் 1,10,000 மக்கள் பங்கேற்றனர். அந்த விழாவில் இருநாட்டுத் தலைவர்களும் அருகருகே அமர்ந்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் இருநாட்டு மக்களின் உறவை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தலைவர்களுக்கு இடையே ஆன அன்பான தனிப்பட்ட உறவையும் அதிகரிக்கிறது. ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி இருக்கிறார். ஒப்பந்தம் இல்லாத கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவிற்கு முதன்முதலாக அவர்தான் அளித்துள்ளார். தற்போது அமெரிக்கா, இரண்டாவது பெரிய ஆயுத விநியோகஸ்தராக இந்தியாவிற்கு மாறி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |