இந்தியா-இங்கிலாந்து இடையே நடக்கயிருந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சென்ற மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பின் சவுதம்டனில் சென்ற வாரம் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே உள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்துக்கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இன்னும் வெளியிலுள்ள மைதானங்களில் பயிற்சியை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின், இலங்கை, ஜிம்பாப்வே பயணங்கள் ஏற்கனவே தள்ளிபோடப்பட்டது.
அத்துடன் செப்டம்பர் மாதத்தில் நடக்க இருந்த 6 அணிகள் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட இருப்பதால், அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. இதற்கிடையில், வருகிற செப்டம்பர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டிருக்கிறது.
இப்பொழுது நமது நாட்டில் இருக்கும் சூழ்நிலையை பார்க்கும் போது இந்த போட்டி தொடர் நடைபெற வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து ‘ஏ’ அணியின் இந்திய வருகையும் திட்டமிட்டபடி நடக்க வழி எதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாளை நடைபெற இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் வருங்கால போட்டி அட்டவணை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் முடிவில் இங்கிலாந்து அணியின் வருகை தள்ளிவைப்பது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி அடுத்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அந்த நேரத்தில் தற்போதைய தொடரையும் சேர்த்து நடத்தலாமா? என்பது பற்றி இருநாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை நடத்தி வருகின்றது.