உலக வங்கியின் கணக்கின்படி உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக பணிபுரிய தொடங்கி அதை விளைவித்து உணவாக மாற்றுவது வரை செய்யப்படும் வேலைகளில் 43% பங்கு கிராமப்புற பெண்கள் உடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ஆம் தேதி உலக கிராமப்புற பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், தட்பவெட்ப நிலை மாறுபாடு, இயற்கை பேரிடர்கள் போன்றவற்றின் காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது உலகின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இப்பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகின் உணவுப் பாதுகாப்பில் கிராமப்புற பெண்களின் பங்கு அளப்பது என்பதால், அவர்கள் தான் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வாய்ப்பு என நம்பப்படுகிறது.
உலக கிராமப்புற பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்திய விவசாயத்தில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த 3 பெண்களின் வெற்றிக்கதைகளை பார்க்கலாம்.
உலகிலேயே அதிகளவு தட்பவெட்ப நிலை மாறுபாடுகள் கொண்டு உள்ளதாக கருதப்படும் மேற்கு வங்காளத்தின் சுந்தர வனக்காடுகளில் ஒருசிறந்த தற்சார்பு விவசாயியாக ரிதா கமிலா என்பவர் உருவாகியுள்ளார். இவர் தனது நிலத்தில் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன் உதாரணமாக மாறியுள்ளார். இத்தனை வேலைகளையும் தனி ஒரு பெண்ணாக நின்று ரிதா சாதித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் தனது நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிய ரிதா, இப்போது அதில் பல வகையான பயிர்களை விளைவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 2,000 விவசாயிகளைக் கொண்ட கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த பத்மா பாய் அப்பகுதியில் பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிக்கும் ஒரே விவசாயி ஆவார். 3 ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ள அவர் சென்ற 2013ஆம் ஆண்டு விவசாய கருவிகளை வாங்க உதவி செய்யும் ஒரு அமைப்பிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றார். அதன்பின் அந்த அமைப்பின் உதவியோடு களத்தில் இறங்கிய அவர் வாங்கிய பணத்தைக் விவசாயத்தில் வேளைப்பளுவைக் குறைக்கும் புது வகையான கருவிகள் வாங்க முதலீடு செய்தார்.
இந்த விவசாய கருவிகளை அதிகமான விலைகொடுத்து வாடகைக்கு எடுக்க முடியாத ஏழை விவசாயிகளை அணுகி, அவர்களுக்கு சரியான கட்டணத்தில் வாடகைக்கு அளித்தார். இதன் வாயிலாக கிடைத்த லாபத்தைக் கொண்டு 2 கான்கிரீட் சாலைகளும், மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாத மண் சாலையையும் அமைத்துள்ளார். அத்துடன் அரசிடம் நிதியுதவியை பெற்று மழை நீர் சேமிப்புக் குளங்களை வெட்டி, அதன் வாயிலாக தேங்கும் நீரை சுத்தகரித்து அருகிலுள்ள அரசுப்பள்ளிக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து தெலங்கானா மாவட்டம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண் விவசாயிகள் இணைந்து வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வறட்சியிலும் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளை கற்றுத்தந்து வருகின்றனர். தற்போது விதர்பா பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வரக்கூடிய இவர்கள் ஒருகாலத்தில் சொந்த நிலம் கூட இன்றி விவசாயக்கூலிகளாக காலத்தைக் கழித்தவர்கள் ஆவர். ஆனால் தக்காண மேம்பாட்டு கழகம் எனும் அமைப்பின் உதவியால் விவசாயத்திலுள்ள பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வரும் இவர்கள், வித்தியாசமான இயற்கை வழிகள் வாயிலாக கூடுதலாக லாபம் ஈட்டி வருகின்றனர். இதை தவிர சங்கம் என்ற சமுதாய வானொலியை தொடங்கி அதன் வாயிலாக சுற்றுப் புறத்திலுள்ள 200 கிராமங்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும் திறன் வேளாண்மை குறித்து கற்றுத்தந்து வருகின்றனர்.