இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவம் அதனை முறியடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மிகவும் மோசமாக இருக்கின்றது. சீனர்கள் எல்லை பிரச்சனையில் மிகவும் வலுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இரு நாடுகளுக்கும் உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இரு நாடுகளிடமும் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ” இல்லை என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் சீனா அதனை நோக்கித்தான் செல்கிறது. பெரும்பாலான நாடுகள் அதனை புரிந்து கொண்டன. சீனா மிக வலுவாக செயல்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.