அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித்சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அண்மை காலங்களில் சுமாரான பார்மில் உள்ள ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வுசெய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக தன் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது “இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சாதனைகளை செய்திருப்பதால் ரிஷப்பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எனினும் சமீபகாலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இவருக்கு பதில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட காத்துக் கிடக்கும் சஞ்சுசாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்துவருகிறது. அத்துடன் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வுசெய்ததில் எந்த பயனும் இல்லை. அதற்கு பதில் கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.