Categories
உலக செய்திகள்

‘இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார்’ – ட்ரம்ப்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தான் பேசிவருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.

அப்போது பேசிய ட்ரம்ப், காஷ்மீர் கள நிலவரத்தை தான் தொடர்ச்சியாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் உறவு மேம்பட எந்தவிதமான உதவியும் செய்ய அமெரிக்காத் தயாராக உள்ளது எனவும் ட்ரம்ப் கூறினார்.

டாவோஸில் இம்ரான் கானுடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் உறவு தற்போது சிறந்த முறையில் உள்ளது எனவும், வர்த்தக மேம்பாடு குறித்து இருநாடுகளும் பேசிவருவதாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளது இந்தியாவின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1972ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் கையெழுத்திட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் விவகாரம் இரு நாடுகள் மட்டுமே பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம் எனவும், மூன்றாம் நபருக்கு அதில் இடமில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது. தற்போது இவ்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது ஒப்பந்தத்தின் அடிப்படைக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆப்கானிதானின் தாலிபான் அமைப்புடன் சமூகத் தீர்வை எட்டி, அமெரிக்க வீரர்களை ஆப்கானிலிருந்து திரும்பப்பெறும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். அதற்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படும் என்ற நோக்கிலேயே பாகிஸ்தான் சார்பு கருத்துகளை ட்ரம்ப் அவ்வப்போது பேசிவருகிறார்.

Categories

Tech |