இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “ஸ்மார்ட்போன்களிலுள்ள சீன செயலிகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா இதில் சரியான முடிவை எடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
அதிபரின் (டொனால்ட் ட்ரம்ப்) அறிவிப்பிற்கு முன், இது குறித்து நான் எதுவம் கூற விரும்பவில்லை. இருப்பினும், இதுகுறித்து பரிசீலனை செய்துவருகிறோம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதில் உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டும் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்” என்றார்.
இந்தியா, டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்துள்ளது குறித்துப் பேசிய அவர், “சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடு உள்ள சில மொபைல் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த ‘clean app’ அணுகுமுறை இந்தியாவின் இறையாண்மையை உயர்த்தும். மேலும், இந்திய அரசு கூறியபடி இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் இது அதிகரிக்கும்” என்றார். இந்தியாவை போல அமெரிக்காவும் முடிவெடுத்ததால் சீனா அஞ்சி நடுங்குகின்றது.