புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலவழித்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நடமாடும் அதிநவீன மொபைல் இரத்த தான பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தின் மூலம் ரத்தம் கொடுக்க முன் வருபவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து ரத்தம் கொடையாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து போக்குவரத்துதுறை சான்றிதழ் பெறுவதற்காக வாகனத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு பணிமனைக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட்டு பின்னர் புதுவை அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வந்தது.
புதுப்பிக்கப்பட்ட வாகனத்தை பார்க்க சென்ற இரத்தக் கொடையாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், “இரத்த தானம் செய்வீர் உயிர் காப்பீர்” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. தற்போது தமிழில் இருந்த வாசகத்தை முழுவதும் நீக்கிவிட்டு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. உயிரைக் காப்பதற்காக ரத்தம் கொடையாக வழங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரத்தியோக வாகனத்திலும், இந்தியை திணிப்பதா என புதுச்சேரியில் இயங்கும் மிகப்பெரிய ரத்த தானம் வழங்கும் அமைப்பான உயிர் துளி ரத்தம் கொடை செய்யும் அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் உயிரைக் கொடுக்கும் இரத்தம் கொடையிலும் இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு ஏற்கனவே இருந்ததை போலவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென உயிர்த்துளி அமைப்பு சார்பாக புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.