மத்திய அரசின் இந்தி திணிப்பை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், பொய்கை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 1,500 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீலம் சந்திரகுமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது தொல் திருமாவளவன் கூறியதாவது, பாராளுமன்ற கூட்டத்தில் அமித்ஷாவின் துறை சார்பாக கிரிமினல் தொடர்பான விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் சாதாரண வழக்குகளில் கைது செய்யப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருடைய ஆவணங்கள் அனைத்தும் சமர்பிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது மிகவும் ஆபத்தானது. இதனால் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படும் என்றார்.
இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். அதிக பலத்துடன் இருப்பதால் இதை சட்டமாக ஆக்கி விட்டார்கள் என்றும் இதை சட்டத்திற்கு புறம்பாக செயல்படுத்துகின்றனர் என்றார். இந்நிலையில் பா.ஜ.க நாடு முழுவதும் இந்தியை திணிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு மாற்றாக இந்திய பயன்படுத்த வேண்டிய காலம் வருவதாக அமித்ஷா தெரிவித்து வருகிறார். அரசியலமைப்பில் மொத்தம் 22 மொழிகள் உள்ளன. அதில் தமிழ்மொழியும், இந்தியும் அமைந்துள்ளது. ஆனாலும் அனைத்து கோப்புகளும் இந்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வதை வன்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் 100% சொத்து வரியை அதிகரித்தால் தான் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியும் என்று அமைச்சர் நேரு விளக்கம் கொடுத்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் மக்களை குழப்பி கொண்டே வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தமிழ்நாட்டை முன்னுதாரணமாக வைத்து திமுக கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று சீதாராம்யெச்சூரியன் கருத்து தெரிவித்தது வரவேற்கக்கூடியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முழுக்கமுழுக்க அரசுதான் காரணமாக இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் வரி சுமையை குறைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி வருகின்ற தமிழ் சொந்தங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தையும் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.