வருகின்ற 31ஆம் நாள் நடைபெறவுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் களமிறக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. பல அணிகளுக்கு எதிராக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது வலது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த சில மாதங்களாகவே பந்துவீச முடியாமல் திணறி வந்தார்.அது டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தொடரிலும் தொடர்ந்தது.
மேலும் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்காததால் உடனே அவரை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை களமிறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழ துவங்கியது. மேலும் இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் ஆறு பவுலர்களுடன் களமிறங்க வேண்டும் என கருத்தை முன்னாள் வீரர்கள் பலரும் முன்வைத்தனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் நிச்சயம் பந்துவீசியே ஆக வேண்டும் என்ற நிலை உருவானது.
இதனிடையே நேற்று இரவு ஹர்திக் பாண்டியா வுக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் எனவும், பயிற்சியின் போது அவரது பந்துவீச்சு சிறப்பாகவே அமைந்தது என்றும், சொல்லப்படுகிறது. மேலும் அவர் உடலளவில் எந்தவித இடையூறும் இதன் காரணமாக இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் நிச்சயம் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.