தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி முடிந்த பின், இந்தியா – வங்கதேச வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இறுதி போட்டியில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் களத்தில் ஓடி வந்த வங்கதேச வீரர்கள் சற்று எல்லையை மீறி இந்திய வீரர்களிடம் நடந்துகொண்டனர். இதனால், இரு அணிகளின் வீரர்களுக்கிடையே களத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஜென்டில்மேன் கேமாக பார்க்கப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிக்கு அவப்பெயர் கிடைக்கும் வகையில் இவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,
“போட்டியின்போது நீங்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய பிரிவுகளில் மோசமாக விளையாடுவது இயல்பாக நடக்கக்கூடியதுதான். ஆனால், களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது ஏற்றுகொள்ள முடியாது. இந்திய அணி களத்தில் நடந்துகொண்ட செயல் அவமானமாகவும், அருவருப்பாகவும் இருந்தது. வயதால், அறியாமையால் அவர்கள் அவ்வாறு நடந்தகொண்டாத தெரியவில்லை. வங்கதேச அணி வீரர்கள் களத்தில் மோசமாக நடந்துகொண்டாலும் அது நமக்கு பிரச்னை அல்ல. நாமும் அப்படி நடந்துகொண்டால்தான் நமக்கு அது பிரச்னை” என்றார்.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிஷன் சிங் பேடி 273 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக, இந்த தகராறில் ஈடுபட்ட மூன்று வங்கதேச வீரர்கள் (முகமது ஹிரிதோய், ஷமீம் ஹொசைன், ரகிபுல் ஹொசைன்), மற்றும் இரண்டு இந்திய வீரர்கள் (ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங்) ஆகியயோருக்கு தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கி ஐசிசி தக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.