இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் தந்தை என்று ஹோமி ஜஹாங்கீர் பாபா அழைக்கப் படுகிறார். இவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து கடந்த 1930-ஆம் ஆண்டு இயந்திரவியலில் பட்டம் பெற்றார். இவர் கடந்த 1931-ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஸ் ஆய்வு கூடத்தில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். இவர் காமா கதிர்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்ததால், அணு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.
கடந்த 1935-ம் ஆண்டு எலக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் குறித்த கணக்கீடுகளை வெளியிட்டார். கடந்த 1937-ஆம் ஆண்டு Cascade theory of electron showers என்ற ஆய்வு கட்டுரையை ஹோமி பாபா எழுதி வெளியிட்டார். இவர் மீசான் அடிப்படை துகளை கண்டுபிடித்ததோடு, குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். கடந்த 1939-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் ஹோமி பாபா பணியாற்றினார். இவருடைய கடுமையான முயற்சியின் காரணமாக கடந்த 1945-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக டாடா அடிப்படை ஆராய்ச்சி அணுசக்தி நிறுவனம் அமைக்கப்பட்டது.
கடந்த 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அணு ஆற்றல் மையத்தின் (பாபா ஆராய்ச்சி மையம்) தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார். இவருடைய வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலால் மும்பையில் உள்ள ட்ராம்பேயில் ஆசியாவின் முதல் அணு உலை தொடங்கப்பட்டது. இந்த அணு உலை கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயக்கப்பட்டது. இன்று இந்தியா அணு ஆயுத சோதனையில் 6-வது இடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் ஹோமி பாபா ஆவார்.
இவருடைய முயற்சியின் விளைவாகத்தான் இந்தியாவில் பல அணுசக்தி மையங்களும், அணு உலைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவரை சிறப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் கடந்த 1954-ம் ஆண்டு பத்மபூஷன் விருதை வழங்கியது. இவர் கடந்த 1941-ம் ஆண்டு மெம்பர் ஆப் ராயல் சொசைட்டி விருதும், 1942-ஆம் ஆண்டு ஆடம்ஸ் விருதும் பெற்றுள்ளார். மேலும் தன் வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த ஹோமி பாபா கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார்.