ஐ.சி.ஜி எனப்படும் இந்திய கடலோர காவல்படையானது, இந்தியகடல் எல்லைகளில் வருடம் முழுவதும் பல பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அமைப்பாகும். அதேபோன்று இந்திய கடற்படையானது, தேசிய மற்றும் சர்வதேச கடல்பகுதிகளில் விரிவான, மிக முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்பு ஆகும். தற்போது கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படைக்கு உள்ள அடிப்படை வேறுபாடுகளை நாம் தெரிந்துகொள்வோம்.
இந்தியகடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கடற்கரை சூழலை காப்பது, வேட்டையாடுபவர்களை பிடித்தல் மற்றும் மீனவர்களுக்கு உதவுவது ஆகிய பணிகளை கடலோர காவல் படை செய்து வருகிறது. மேலும் கடல் கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பானது மேற்கொண்டு வருகிறது. இது கடற்படை மற்றும் பிறநாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடலோர காவல்படையின் எல்லை, இந்திய கடல் பகுதிக்கு மட்டும் உட்பட்டது ஆகும். எனினும் இந்திய கடற்படை பணிகள் என்பது பெர்சியன் கல்ப், சோமாளி பெனின்சுலா மற்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் ஆப் மலாக்கா ஆகிய பகுதிகள் வரை விரிவடைந்ததாகும். இதேபோல் தென் மற்றும் கிழக்கு சீனகடல் பகுதிகள், மெடிடேரியன் கடல்பகுதி போன்ற இடங்களிலும் இந்திய கடற்படை பணிபுரிந்து வருகிறது. அத்துடன் சர்வதேச எல்லைகளில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படையில் வீரர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் போர்சாதனங்களை பராமரிப்பது ஆகிய பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
இதில் இந்திய கடலோர காவல்படை சென்ற 1977-ம் வருடம் பிப்ரவரி 1-ம் தேதி துவங்கப்பட்ட அமைப்பாகும். ரோந்து மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான பிரத்யேக அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை, இந்திய ஆயுதப்படைகளின் ஒரு பிரிவாக 1950ம் வருடம் ஜனவரி 26ம் தேதி துவங்கப்பட்டது. இந்திய கடலோர காவல் படையில் 20,000 வீரர்கள் இருக்கின்றனர். மேலும் 160 கப்பல்கள் மற்றும் 62விமானங்கள் இருக்கிறது.
கடற் படையில் 67,000 வீரர்கள் மற்றும் 75,000 ரிசர்வ் வீரர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையில் 150 கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் கடற்படையிடம் இருக்கிறது. இந்திய கடலோர காவல் படைக்கு மொத்தம் 42 நிலையங்கள் இருக்கிறது. அதேபோன்று இந்திய கடற்படையில் 67 நிலையங்கள் இருக்கிறது. இவை மேற்கு கடற்படைதளம், தெற்கு கடற்படைதளம் மற்றும் அந்தமான நிகோபார் கடற்படைதளம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 7 நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.