நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எவ்வித முறைகேடும் இருக்கக்கூடாது என்பதே இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு திமுக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் மிக இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்து கொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்ற தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இது அம்மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டம் மற்றும் துடிதுடிப்பான ஊக்கத்தை அளிக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிமை மற்றும் பிரதிபலிக்கிறது. மேலும் மகாகத்பந்தன் கூட்டணி சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள முறைகேடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
நாட்டில் தேர்தல்கள் அனைத்தும் எவ்வித தலையீடும் இல்லாமல் நியாயமாக நடுநிலையுடன் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய குடிமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேறினால் மட்டுமே நமது நாட்டில் ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதியாகும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.