இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்த பத்து பேரில் இருவர் கணவன்-மனைவி என்பது புதுமையான நிகழ்வாக கருதப்படுகிறது. கணவன்-மனைவியான நீதிபதிகள் திரு.கே.முரளி சங்கர், திருமதி எஸ்.டி தமிழ்ச்செல்வி ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி திரு.கே முரளி சங்கர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி தமிழ் செல்வியும், கடந்த 1968-ம் ஆண்டு பிறந்தவர்கள் சட்டப்படிப்பை முடித்து 1995 -ம் ஆண்டு மெஜேஸ்ட்ரேட் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக திரு.கே முரளி சங்கரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி திருமதி எஸ்.டி தமிழ் செல்வியும் பணியாற்றி வருகின்றனர். நீதிபதிகளாக இருக்கும் கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க இருப்பது இதுவே முதல் முறை என வழக்கறிஞர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.