மத்திய அரசு சார்பாக முதற்கட்டமாக சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி கொரோனா தடுப்பு ஊசி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கு அரசுக்காக சிறப்பு விலையாக ஒரு தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா இந்த தடுப்பூசியை அரசுக்கு வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது. முதற்கட்டமாக 16ஆம் தேதி முதல் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் தொடங்கும் போது அங்கே சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவின் கோவிட் சில்டு தடுப்பூசி பயன்படுத்தப்படும்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரோ ஜெனிகா இணைந்து கண்டுபிடித்த இந்த தடுப்பூசியை இந்தியாவிலேயே சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரிக்கிறது. ஏற்கனவே அரசு நாடு முழுவதும் பரவலாக தடுப்பூசி முகாம்கள் நடத்தி இருக்கிறது. மக்களுக்கு வெகுவிரைவாக தடுப்பூசி அளிக்க இருக்கிறது என்பதால் இதற்கான உற்பத்தியை சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தொடங்கிவிட்டது.
மத்திய அரசுக்கு மட்டுமே தற்போது இந்த தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதாலும், இதனால் தனியாருக்கு விற்க முடியாது என்பதாலும் அரசுக்காக மலிவு விலையில் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. ஆகவே தனியாருக்கு பின்னர் அளிக்கப்படும் போது அதிக விலையில் வழங்கப்படும். ஆனால் தற்போது அரசுக்காக ஒரு தடுப்பூசி 200 ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.