இந்தியாவில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கு தொடக்கத்தில் அதிகமான மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதேபோன்று தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில அதிக செலவாகிறது. இந்நிலையில் மத்திய அரசு நீட் எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சீனா,உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த சமயத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று காரணமாக இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் படிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் சீனாவில் மருத்துவம் பயிலும் இந்தியமாணவர்கள் மீண்டுமாக சீனா செல்வதற்கு கடும் கட்டுப்பாடும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி விமான சேவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் நேரடி விமானங்கள் இல்லை. இது தொடர்பாக இந்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இப்போது கொரோனா வைரஸ் குறைந்து உள்ளதால் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று மருத்துவபடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் சீனாவிலுள்ள இந்திய தூதரகம் சீனாவில் மருத்துவம் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. அதாவது சீனஅரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 5 வருட மருத்துவ படிப்பு மற்றும் ஓராண்டு இன்டர்ன்ஷிப் வழங்கும் 45 பல்கலைக்கழகங்களில் மட்டுமே சேரவேண்டும். மருத்துவ அமர்வுகளுக்கு சீனமொழியான புடோங்குவாவை கற்றுக்கொள்வது அங்கு கட்டாயம் ஆகும். அதன்பின் சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட்-யுஜி தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். சீனநாட்டில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் அந்நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம்பெற வேண்டும்.