சீன கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் கணக்கெடுப்பில், சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள். அவர்களில் ஆசிரியர்களும் அடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், அங்கு படித்துவந்த அனைத்து மாணவர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
அதனைப் போலவே இந்திய மாணவர்களும் தங்கள் தாய் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சீனாவிற்கு மீண்டும் திரும்ப அந்நாட்டின் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து சீன கல்வி அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” தாங்கள் படிக்கும் மற்றும் பணியாற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து முறையான அழைப்பு கடிதம் கிடைக்காத வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவரும் அடுத்த தகவல் எதுவும் வரும் வரையில் தங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடாது” என்று கூறியுள்ளது.
அதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் அனைவரும் சீனா திரும்ப முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்திய மாணவர்கள் சீனா திரும்ப முடியாத சூழ் நிலை உண்டாகி இருப்பதை, பீஜிங் நகரில் இருக்கின்ற இந்திய தூதரகம் நாட்டின் கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவர்கள் திரும்பும் பிரச்சினையில் சீன அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக காத்திருக்கிறோம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது.