இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது.
இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் எல்லைப் பகுதிகளை பலப்படுத்திக் கொள்வதற்காக இரு நாட்டின் ராணுவத்தினரும் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதத்தில் இருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்த இந்தி மொழி தெரிந்த நபர்களை சீனா ராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இந்தி மொழி தெரிந்த நபர்களை எல்லையில் நிறுத்தி வைத்தால் போர் நடக்கும் போது சீனாவுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய ராணுவமும் சீன மொழி தெரிந்த நபர்களை ராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த வேலைக்கு 18 வயது முதல் 42 வயதுக் குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சீன மொழி தெரிந்தவர்களை சேர்ப்பதற்காக 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டதோடு, ராணுவ வீரர்களுக்கு சீன எழுத்துக்களை கற்பித்துக் கொடுக்கும் அடிப்படை பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது.