இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று உத்தர பிரதேச மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள் என்று அவர் பேசியுள்ளார்.
உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் மாநில பிராந்திய மொழியும் மதிக்கப்படுகிறது. ஆனால் முதலில் இந்தி. அதன் பிறகுதான் பிராந்திய மொழி என கூறியதுடன் நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை கட்டாய நேசிக்க வேண்டும். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி செல்லலாம் என்றும் இந்திக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் உறவு வைத்திருப்பவர்கள் என்றும் கருதப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தி தேசிய மொழி என்ற கருத்துக்கு பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவரின் சர்ச்சை பேச்சு விவாதத்தை கிளப்பியுள்ளது.