சட்டம் இரு மொழி பயன்பாடு குறித்து பேசும் போது நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவிற்கு இந்தி மட்டும் என்ற உறுதிமொழி தருகின்ற அதிகாரம் யார் கொடுத்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி ஜிப்மர் அலுவல்மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்டமீறல் ஆக அமைந்துள்ளது.
ஏப்ரல் 28-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டிருக்கிறது. மேலும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் இருக்கிறது.
ஒரு சுற்றறிக்கை No/ HC/ OLI/ 2022 அலுவல் மொழி சட்டம் 1963 பிரிவு 3 குறிப்பிட்டு அதன்படி பொது அறிக்கைகள் தீர்மானங்கள் விதிகள் நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள் ஊடக செய்திகள் ஒப்பந்தங்கள் உடன்பாடுகள் உரிமங்கள் அனுமதி கோரல் மற்றும் அதற்கான படிவங்கள் போன்ற ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருக்கின்றது.
மேலும் இரண்டாவது சுற்றறிக்கைNo/OL imple/ 2022 அதே தேதியில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் உள்ளடக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அது சொல்வது என்ன? அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணியிடங்கள், பணிகள் ஆகியவற்றில் பொருள் விவரங்களின் தலைப்புக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் எழுதப்படும். இந்த உறுதிமொழி ஜிப்மர் இந்தி பிரிவால் நாடாளுமன்ற அலுவல்முறை குழுவிற்கு தரப்பட்டிருக்கிறது.
மேலும் இது சட்ட மீறல் மட்டுமன்றி இந்தியைத் திணிக்கின்ற அப்பட்டமாக நடவடிக்கை என இரு மொழிகளில் குறித்து பேசும்போது இந்தி மட்டும் என்ற உறுதிமொழியை தரும் அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகின்றது? மேலும் என்னைப்பொறுத்தவரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள பிரிவுகளுக்கு இந்தி செல் என்ற பெயர் சரி இல்லை. அலுவல் மொழி அமலாக்க குழுவின் வகையில்”OLi cell” என்று தான் இருந்திருக்க வேண்டும்.
மேலும் அந்த குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என கருதுகின்றேன். அந்த செல் அரசியல் சட்டத்தின் படியே செயல்பட வேண்டும் இந்தி மட்டுமே என்கின்ற உறுதிமொழி சட்ட நியதிகளை கடந்தது ஆகும். உண்மையில் மத்திய அரசின் துறை நிறுவனங்கள் எல்லாம் பொதுமக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில் செய்வதை தான் ஊக்குவிக்க வேண்டும். அதன் காரணமாக இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/ OL imple /2022 திரும்ப பெற வேண்டும். மேலும் உடனடியாக இந்த நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என அதன் இயக்குனர் மரு.ராகேஷ் அகர்வாலுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.